RRR Movie Review : சுதந்திர போராட்டம் பின்னணியில் ஒரு மார்வெல் ஜிம்மிக்ஸ்.. ஆர்.ஆர்.ஆர் விமர்சனம்!


RRR Movie Review : சுதந்திர போராட்டம் பின்னணியில் ஒரு மார்வெல் ஜிம்மிக்ஸ்.. ஆர்.ஆர்.ஆர் விமர்சனம்!


இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு பச்சைக் குத்தும் போது ரம்மியமாக பாடும் மல்லியின் குரல் பிடித்துப் போக காசுகளை தூக்கி எறிந்து விட்டு அந்த சிறுமியையே கடத்திச் செல்கின்றனர். அந்த சிறுமியை காப்பாற்ற காப்பான் ஜூனியர் என்டிஆர் செய்யும் முயற்சிகளும், அந்த குழந்தையை காப்பாற்ற வரும் காப்பானை கைது செய்ய ராம்சரணுக்கு உத்தரவு கொடுக்கப்பட்ட நிலையில், பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரியான ராம்சரண் என்ன செய்தார் என்பதே RRR படத்தின் கதை.

1920களில் அதிலபாத் எனும் மாவட்டத்தில் இந்த கதை நடக்கிறது. காட்டில் மிருகங்களுடன் ஜூனியர் என்டிஆரின் படுமாசான என்ட்ரி பெரியவர்களுக்கு சற்றே அதிருப்தியை ஏற்படுத்தினாலும், குழந்தைகள் கொண்டாடுவார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு இயக்குநர் ராஜமெளலி வைத்துள்ளார். Brown Beggars என இந்தியர்களை அடிமையாக வைத்திருக்கும் ஆங்கிலேயர்கள் சொல்லும் வார்த்தைகள் சுருக்கென குத்துகிறது.

2000க்கும் அதிகமான மக்கள் ஒரு போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அப்போது ஸ்டேஷனுக்குள் ஒருத்தன் கல் எறிகிறான். அவனை கண்டுபிடித்து கைது செய் என ராம் ஆகிய ராம்சரணுக்கு உத்தரவு கொடுக்கப்படுகிறது. அந்த கூட்டத்தில் இருக்கும் அத்தனை பேரையும் இரக்கமே இல்லாமல் கொடூரமாக லத்தி சார்ஜ் செய்து அடித்து நொறுக்கி அந்த கல் எறிந்தவனை கண்டுபிடித்து கைது செய்யும் விதமாக ராம்சரணின் என்ட்ரி படுமாஸாக இருக்கிறது.

பரிசலில் சிக்கிக் கொள்ளும் ஒரு சிறுவனை காப்பாற்ற குதிரையில் வரும் ராம் மற்றும் புல்லட்டில் வரும் பீம் என இருவரும் பாலத்துக்கு அடியில் சிக்கி இருக்கும் சிறுவனை மீட்க எப்படி தொங்கியபடி அவனை மீட்கின்றனர் என்கிற காட்சி மைண்ட் பிளோயிங். அதன் பின்னர் இருவரும் நண்பர்களாக ஆகின்றனர். கடத்தப்பட்ட குழந்தையை காப்பாற்ற இஸ்லாமியராக வேடமிட்டு அந்த ஊருக்குள் பீம் நுழைந்துள்ளார். அவரை பிடிக்க நியமிக்கப்பட்ட அதிகாரி தான் ராம் என்பது தெரியாமலே இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகுகின்றனர்.

ஆங்கிலேயர்கள் இருக்கும் அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு நண்பன் பீமை ராம் அழைத்துச் செல்கிறான். இவனை ஏன் கூட்டிட்டு வந்த இவனுக்கு டான்ஸ் ஆடத் தெரியுமா என ஆங்கிலேயர்கள் சிலர் கிண்டலடிக்க இருவரும் இணைந்து போடும் மரண குத்து நடனம் தான் அந்த நாட்டுக்கூத்து பாடல். தியேட்டரே எழுந்து நின்று டான்ஸ் ஆடியதால் பல சீன்களை பார்க்க முடியாமலே போய் விடுகிறது.

நீரும் நெருப்புக்கும் சண்டை

ஒரு கட்டத்தில் பாம்பு ஒன்று ராம்சரணை கடித்து விட மூலிகை செடிகளை கொடுத்து ராமின் உயிரை பீம் காப்பாற்றி விடுகிறார். அதன் பிறகு தனது உண்மையான பெயரையும் தான் வந்த விஷயம் குறித்தும் நண்பன் என நினைத்து ராமிடம் சொல்ல உண்மையை தெரிந்து கொண்ட ராம் குழந்தையை காப்பாற்ற முயலும் பீமை தடுக்க என்ன செய்தார் என்பது தான் இன்டர்வெல் சீன். நெருப்புடன் ராம்சரண் வந்து சண்டை போடுவதும், தீயணைப்பு வண்டி ஹோர்ஸ் பைப் உடன் நீர் பொங்க ஜூனியர் என்டிஆர் வந்து சண்டை போடும் அந்த நீரும் நெருப்பும் காட்சி இந்திய சினிமாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு இன்டர்வெல் பிளாக்காக அமைந்துள்ளது.

ஜூனியர் என்டிஆர் மிருகங்களை அரண்மனைக்குள் விட்டு மல்லியை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளை தடுத்து ராம்சரண் பீமை கைது செய்கிறார். பீமை கைது செய்த ராம்சரணுக்கு ஆங்கிலேயர் படையில் பெரிய பொறுப்பு கிடைக்கிறது. சவுக்கடி கொடுத்து பீமின் உடலை பிய்த்து எடுக்கும் காட்சிகளில் மன்னிப்பு கேள் உயிருடன் விடுவார்கள் என ராம் சொல்ல மன்னிப்பு கேட்க முடியாது என மறுத்து பீம் பாடும் பாடல் சுதந்திர தாகத்தை தூண்டுகிறது.

கிளைமேக்ஸ் எப்படி

ராம்சரணின் அப்பா அஜய் தேவ்கனின் பிளாஷ்பேக் காட்சிகள், சமுத்திரகனி ஆங்காங்கே ராம்சரணுக்கு சொல்லும் அட்வைஸ் காட்சிகள், ஆலியா பட்டின் சில சாகசங்கள் என நிறைந்திருக்கும் இந்த RRR திரைப்படத்தில் டிரைலரில் பார்த்தது போல கடைசியாக ராமும் பீமும் இணைந்து ஆங்கிலேயர்களை பந்தாடுகின்றனர். இந்த இருவரும் ஏன் இணைந்து போராடுகின்றனர் என்கிற ட்விஸ்ட் செம சூப்பராக அமைந்துள்ளது.

இயக்குநர் ராஜமெளலியின் இயக்கம், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் முழு அர்ப்பணிப்பான நடிப்பு இசையமைப்பாளர் மரகதமணியின் இசை, கே.கே. செந்தில் குமாரின் ஒளிப்பதிவு என காட்சிக்கு காட்சி ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதம் என அனைத்துமே பிளஸ் ஆகத் தான் உள்ளது.

சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் எடுக்கப்பட்டு இருக்கும் மார்வெல் ஜிம்மிக்ஸ் போல படம் இருப்பது தான் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக அமைந்துள்ளது. ராம்சரண், ஜூனியர் என்டிஆரை தவிர மற்ற அனைத்து கதாபாத்திரங்களுக்கும் பெரிய முக்கியத்துவம் இல்லை. எப்படி இருந்தாலும், இத்தனை பெரிய பிரம்மாண்ட படைப்பை ரசிகர்கள் தாராளமாக தியேட்டருக்கு சென்று ஒரு முறை பார்க்கலாம்!

Comments

Popular posts from this blog