நூல் பண்டல் ரூ.17 ஆயிரமாக அதிகரிப்பு ஜவுளி உற்பத்தி 30% சரிவு: விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
நூல் பண்டல் ரூ.17 ஆயிரமாக அதிகரிப்பு ஜவுளி உற்பத்தி 30% சரிவு: விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
சேலம்: நூல் விலை ஏற்றம் காரணமாக, ஜவுளி உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கைத்தறி சேலை, வேட்டிகளும், போர்வை, டவல் உள்ளிட்டவையும், விசைத்தறியில் ஏற்றுமதி ரகங்களும், டவல், கேரளா வேட்டி, சேலை, காட்டன் வேட்டி, அபூர்வா சேலை ரகங்கள், லுங்கி உள்பட பல்வேறு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யும் ரகங்களில் ஏற்றுமதி ரகத்தை விட, மற்ற ஜவுளி வகைகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த 8 மாதமாக நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சேலத்தை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிகளவில் உள்ளனர். இந்த பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி அளவுக்கு ஜவுளி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இத்தொழிலை நம்பி பல லட்சம் பேர் உள்ளனர். கடந்த 3 மாதத்திற்கு மேலாக பருத்தி விளைச்சல் குறைந்ததால், மில்களில் நூல் உற்பத்தி குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாக கடந்தாண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் 50 கிலோ கொண்ட பண்டல் ரூ.9500 என விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலை படிப்படியாக உயர்ந்து, தற்போது ரூ.17 ஆயிரம் என அதிகரித்தது. நூல் விலை உயர்வை கண்டித்து ஜனவரி இறுதியில் வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில், ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான விசைத்தறி கூடங்கள் வாரக்கணக்கில் மூடப்பட்டன. இதனால் ரூ.100 கோடி அளவுக்கு ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. அடிக்கடி ஏறும் நூல் விலை உயர்வு காரணமாக, ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் செலவாகிறது.
இதன் காரணமாக சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட பல மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக ஜவுளி உற்பத்தியை 30 சதவீதம் குறைத்துள்ளனர். நூல் விலை தொடர்ந்து நீடித்தால், எதிர்வரும் நாட்களில் ஜவுளி உற்பத்தி மேலும் குறைய வாய்ப்புள்ளது. அதனால் நூல் விலையை குறைக்க ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறினர். நூற்றுக்கணக்கான விசைத்தறி கூடங்கள் வாரக்கணக்கில் மூடப்பட்டன. இதனால் ரூ.100 கோடி அளவுக்கு ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டது.
Comments
Post a Comment